திண்டுக்கல் ஜூலை :17
திண்டுக்கல் மாவட்டம், முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப்பள்ளியில் கல்விக்கண் திறந்த காமராஜரின் 122- வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி தினமாக கொடி ஏற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் குழு உடற்பயிற்சி, காமராஜர் பற்றிய சொற்பொழிவு, பாடல்கள், நடனம் முதலியவை இடம் பெற்றன. காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பேச்சு போட்டி, ஓவிய போட்டி, பாடல்கள், மாறுவேடம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. முத்தழகுபட்டி பங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் கல்வி அறக்கட்டளை சார்பில் ரூபாய் 5000 மதிப்பிற்கு சத்துணவு உண்ணும் மாணவர்களுக்காக 50 சில்வர் தட்டுகள் பரிசாக வழங்கப்பட்டது. கல்வி அறக்கட்டளை தலைவர் நிக்கோலஸ் ஆசிரியர் (ஓய்வு) , சவேரியார் ஆசிரியர் (ஓய்வு), செபஸ்டியான்
மற்றும் செல்வி வே.அல்போன்ஸ் ஆசிரியை (ஓய்வு) ஆகியோர் வழங்கினார்கள். போதை ஒழிப்பு உறுதி மொழியை நிக்கோலஸ் ஆசிரியர் (ஓய்வு) மூலம் பள்ளி ஆசிரியைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக முத்தழகுபட்டி பங்குத்தந்தை அமலதாஸ் அடிகளார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தேசத்தலைவர்கள் போல் மாணவர்கள் வேடமணிந்து வந்திருந்தார்கள். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் அடிப்படையில் 10 வயதான பெண்கள், வயது வந்தோர் கல்வி பெற பள்ளிக்கு வருகை தந்தார்கள். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி. ஜெயராணி மற்றும் ஆசிரியைகள் மிக சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.