அரியலூர், ஆக:08
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 10-வது தேசிய கைத்தறித் தினத்தினை முன்னிட்டு கைத்தறித் துறையின் சார்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா கலந்துகொண்டார்.
இந்தியாவில் 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் நாள் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கைத்தறித் தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் வருவாயை உயர்த்தவும் அவர்களின் பெருமையை அதிகரிக்கவும் தேசிய கைத்தறி நாள் 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் 10-வது தேசிய கைத்தறி தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்துப்பார்வையிட்டார்.
இக்கண்காட்சியில் திருபுவனம் அசல் பட்டு சேலைகள், ஆஃபைன் பட்டு சேலைகள், வெங்கடகிரி பருத்தி சேலைகள் மற்றும் பட்டு வேஷ்டிகள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, 7 கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.4.50 இலட்சம் மதிப்பில் நிதியுதவிகளையும், குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 2 நெசவாளர்களுக்கும், முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 8 நெசவாளர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1200/- வீதம் உதவித்தொகைக்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கைத்தறித் துறை அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்