கன்னியாகுமரி மே 8
குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் கடல் அலையில் சிக்கி பயிற்சி மருத்துவர் ஐந்து பேர், சுற்றுலா பயணி இருவர் மற்றும் ஏழு வயது குழந்தை என மொத்தம் எட்டு பேர் பலியாகி உள்ளனர். இதனால் கடற்கரை பகுதி முழுவதும் போலீசாரை பலப்படுத்தியும், ரோந்து மற்றும் பாதுகாப்பை தீவிர படுத்தியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். இதன் விளைவாக சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் லெமூர் கடற்கரை, சங்குத்துறை, சொத்தவிளை, முட்டம் கடற்கரை போன்ற சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் சுற்றுலா தளங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு காரணமாக ராட்சத அலைகள் எழும் என்பதால் கடற்கரை பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் கடற்கரை கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும், சுற்றுலாத் தலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.இதனிடையே வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி கன்னியாகுமரி, சின்ன முட்டம், ஆரோக்கியபுரம், கோவளம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் வழக்கத்துக்கு மாறாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் கடற்கரைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. வள்ளம் மற்றும் நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை மாலையிலேயே கரைக்கு திரும்பி விட்டனா்.இந்நிலையில் ராஜாக்கமங்கலம் லெமூா் கடற்கரையில் திங்கள்கிழமை கடலுக்குள் இறங்கிய பயிற்சி மருத்துவா்கள் 5 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் பேரூராட்சி பணியாளா்களும், மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில் போலீஸாரும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதனால் நாள்முழுவதும் பயணிகள் முக்கடல் சங்கமத்தில் நீராட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கடற்கரைப் பகுதிக்கு யாரும் செல்லாமல் தூரத்தில் நின்ற வண்ணம் கடல் அழகை ரசித்து வருகின்றனர்.
போலீசாரின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் குமரி கடற்கரைப் பகுதிகள்
Leave a comment