கீழக்கரை மே 07-
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேதுக்கரை ஊராட்சியில் பொதுமக்களுக்கு வழங்கி வரும் குடிநீர் திட்டப்பணிகளை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து திருப்புல்லாணி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.32.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் திருப்புல்லாணி ஊராட்சியில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதன் விபரம் குறித்து கேட்டறிந்ததுடன், பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்குவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராஜேந்திரன் .இராஜேஸ்வரி வட்டார வளர்ச்சி அலுவலக பொறியாளர்கள் இராமசாமி அருண் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.