கரூர் மாவட்டம் – மே – 2
தரகம்பட்டி அருகில் மாவத்தூர் ஊராட்சி பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் வண்டல் மண்களை கடத்தி வெளியூர் களுக்கு லாரிகள் மூலமாக அனுப்பி வருவதாக பொதுமக்களுக்கு தகவல் தெரிய வந்தது.
இதே போல் நேற்று காலை மாவத்தூர் குளத்தில் இரண்டு டிப்பர் லாரிகளின் பொக்ளின் இயந்திரம் மூலம் வண்டல் மண் ஏற்றுவதாக மாவத்தூர் ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்திக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தி அந்தப்பகுதி திமுக மாவட்ட பிரதிநிதி செந்தில்மோகன் உள்பட பொதுமக்கள் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அரசு அனுமதி இல்லாமல் மாவத்தூர் குளத்தில் வண்டல் மண் கடத்துவது தெரியவந்தது. இதனால் பாலவிடுதி காவல் நிலையத்திற்கு வருவாய் துறைக்கும் தகவல் அளித்துள்ளனர் இந்த தகவலின் அடிப்படையில் பாலவிடுதி காவல் ஆய்வாளர் வேல்முருகன், பாலவிடுதி ஆர்.ஐ. சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு லாரிகள் மற்றும் பொக்ளின் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் உரிய ஆவணங்கள் உள்ளதாக பொக்ளின் மற்றும் இரண்டு லாரிகளை விடுவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாலவிடுதி காவல் நிலையம் முன்பாக உள்ள வையம்பட்டி, தரகம்பட்டி, கடவூர் பிரிவு ரோடு அருகே திடீர் சாலை மறியல் போராட்டம் செய்தனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த பாலவிடுதி ஆய்வாளர் வேல்முருகன், பாலவிடுதி ஆர்.ஐ. சிவக்குமார் உள்பட அதிகாரிகள் பேச்சு வார்த்தை செய்தனர். அப்பொழுது விடுவிக்கப்பட்ட இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லின் இயந்திரங்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை விளக்கிக் கொண்டனர். பின்னர் மாவத்தூர் ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தி பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் ஒரு பொக்ளின் இயந்திரத்தின் ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிந்து பாலவிடுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.