ராமநாதபுரம், மே 3 –
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா ஒரு ஆன்மிக சுற்றுலாத்தலமாகும். இங்கு தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து யாத்ரீகர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இவர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக தர்ஹா நுழைவு வாயில் முன்புறம் (சர்வே எண் 502 , 504) இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு சிறு வியாபாரிகள் தொழில் செய்து வருகின்றனர். இவ்விடத்தை ஒரு சில சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆக்கிரமிப்பு செய்த இவ்விடத்தை கேரளா யாத்ரீகர்களிடம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை முன் பணம் பெற்றுக்கொண்டு தினமும் ரூ. 500 வரை குத்தகை வசூலிக்கின்றனர். இதை ஊராட்சி மன்ற தலைவர் கண்டும் காணாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள கடைகளை அப்புறப் படுத்த வேண்டும் என வருவாய் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள கடைகள் அகற்றப்படாததால் சமூக விரோதிகள் வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் நிலை தொடர்கிறது. ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.