கொடைக்கானல், மே 2-
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைக்கிராமமான பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் கோயிலில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா தனது உறவினர்களுடன் சென்று சாமி கும்பிட்டார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவில் உள்ளது பூம்பாறை. மேல்மலைக்கிராமமான பூம்பாறையில், 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. பழநி தேவஸ்தானத்திற்கு இந்த கோயில் பாத்தியப்பட்டது. பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி சிலை, நவ(9) பாஷாணங்களால் செய்யப்பட்டது. ஆனால் பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் என்று அழைக்கப்படும் முருகன் சிலையானது, தச(10) பாஷாணங்களால் செய்யப்பட்டது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வப்போது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வந்து வழிபாடு நடத்தி விட்டுச் செல்வது வாடிக்கை. இத்தகைய சூழ்நிலையில், தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது குடும்பத்துடன் கொடைக்கானலில் தனியார் விடுதி ஒன்றில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். அவரது மனைவி துர்கா ஸ்டாலின், தனது உறவினர்களுடன் பூம்பாறை கிராமத்திற்கு சென்றார். அங்கு குழந்தை வேலப்பருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பயபக்தியுடன் வணங்கி வழிபட்டார்.