கன்னியாகுமரி மே 13
குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர்.கோடை காலத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா வாசிகள் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் சென்று தங்களது விடுமுறை காலத்தை செலவிட்டு வருகின்றனர். குளிர்நிலவும் சுற்றுலா தலங்கள் மட்டுமல்லாமல் அனைத்து சுற்றுலா தலங்களும் பயணிகளால் நிரம்பி வழிகின்றன. பள்ளிகளுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் குமரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அதிலும் குறிப்பாக கேரளாவை ஒட்டிய பகுதியாக குமரி மாவட்டம் இருப்பதால் இங்குள்ள தட்பவெட்ப நிலையும் அவ்வப்போது மாறுபட்ட வண்ணம் உள்ளது. தற்போதுகோடை வெயில் அனைவரையும் வாட்டி வதைத்து வரும் நிலையில் குமரியில் மட்டும் அனைவரையும் குளிர்விக்கும் வண்ணம் கோடை மழை இடைவிடாது கொட்டி வருகிறது. எனவே கோடை வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ள சுற்றுலா பயணிகளின் தற்போதைய தேர்வு குமரி மாவட்டமாக உள்ளது. எனவே அனுதினமும் சுற்றுலா பயணிகள் குமரி மாவட்டம் வருகை தந்து இங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு விரும்பி செல்வதால் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் சுற்றுலா தல வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அளவுக்கு அதிகமான சுற்றுலா வாகனங்கள் வருவதால் அவ்வப்போது வாகன நெருக்கடி ஏற்படுவதும் வழக்கமான ஒன்றாகி விட்டது. தற்போது
கோடை விடுமுறை முடிவுக்கு வர குறைந்த நாட்களே இருப்பதால் சுற்லுா தலங்கள் அனைத்தும் களைகட்டியுள்ளன.
இந்த வகையில் 400 ஆண்டுகளை கடந்த பத்மநாபபுரம் அரண்மனையிலும் சுற்றுலா பயணிகள் கட்டுக்கடங்காமல் வந்து செல்கின்றனர்.நேற்று ஒரே நாளில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டதால் அரண்மனையின் அனைத்து பகுதியும் சுற்றுலா பயணிகளின் கூட்டமாக காணப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் அரண்மனையில் ஒவ்வொரு பகுதியையும் பார்வையிட்டு அடுத்த பகுதிக்கு கடந்து செல்வதற்கு கால தாமதம் ஏற்பட்டது. வெயிலில் அரண்மனை கட்டிடங்கள் குளிர்ச்சியாக இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு வெயில் ஒரு பொருட்டாக தெரியவில்லை. பயணிகள் வருகையால் அரண்மனை பட்டுமன்றி பத்மநாபபுரம் ரத வீதிகள் முழுவதும் வாகனங்களால் திணறியது. அரண்மனையினை காண நேற்று கேரள சுற்றுலா பயணிகளே அதிகம் வந்திருந்தனர். அதேபோல் கன்னியாகுமரி கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து சூரிய உதயம் மற்றும் மறைவை காணவும், படைகள் பயணம் செய்து கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் 133 அடி ஆளுயர திருவள்ளுவர் சிலையை காண சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வர தொடங்கியுள்ளனர். இதனால் கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதிகள் ஹோட்டல்கள் நிரம்பி வழிகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் மாவட்ட காவல்துறை சார்பில் சுற்றுலா தலங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.