நாகர்கோவில் – மே – 15,
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வாயிலாக, நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.251.43 கோடி மதிப்பில் நடைபெற்று முடிவடைந்து குடிநீர் திட்டப் பணிகள் வாயிலாக, நாகர்கோவில் மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நீராதாரமான புத்தன்அணையின் மேல்பகுதியில் உள்ள பரளியாற்றில் நீர் எடுக்கும் கிணறு மற்றும் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கிருஷ்ணன் கோயிலில் புதிதாக கட்டப்பட்ட 41.12 எம்எல்டி சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, 11 புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மற்றும் 12 பழைய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் குடிநீர் ஏற்றப்பட்டு உள்ளது. அதன்பின்னர், புதிதாக பதிக்கப்பட்டுள்ள 420.612 கிலோ மீட்டர் பகிர்மான குழாய்கள் வழியாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. புத்தன்அணை குடிநீர் திட்டத்தின் கீழ் நாகர்கோவில் நகர பகுதிகளில் 85,000 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குடிநீர் இணைப்புகளுக்காக பதிக்கப்பட்ட குழாய்கள் தரமற்ற நிலையில் இருப்பதால் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு நாகராஜகோவில் சந்திப்பு போன்ற பகுதியில் கூட்டுக் குடிநீர் குழாய் திடீரென உடைப்பு ஏற்பட்டு சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். இதனால் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு போடப்பட்ட குழாய்களை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளாமல் பணிகள் துவங்கியதால் இதுபோன்று ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவதாக குற்றம் சாட்டி உள்ளனர். தற்போது கோடை வெயில் காரணமாக நீர் நிலைகள் வறண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி வரும் நிலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருவதாகவும் தரமான குழாய்களை குடிநீர் இணைப்புகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்