ஒகேனக்கல், மே 04,
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள எஸ்.வாழவந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி. வயது 22. ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை. இவர் மே தினத்தை முன்னிட்டு விடுமுறை தினமான நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு காரில் ஒகேனக்கல் வந்தனர். அங்கு பல இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு ஆலம்பாடி அருகே காவிரி ஆற்றில் நண்பர்கள் குளித்தனர். நண்பர்கள் குளித்து முடித்து கரை ஏறி வந்தனர். அப்போது கிருஷ்ணமூர்த்தி ஆற்றிலிருந்து கரைக்கு வராதது தெரியவந்தது. கிருஷ்ணமூர்த்தியை நண்பர்கள் ஆற்று நீரில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை கிருஷ்ணமூர்த்தியின் சடலம் ஆலம்பாடி பகுதியில் கரை ஒதுங்கியது. ஒகேனக்கல் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொழிலாளர் தினத்தில் சுற்றுலா வந்த தனியார் நிறுவன தொழிலாளி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.