ஈரோடு, மே.11-
ஈரோட்டில் 23 கிலோ அழுகிய மாம்பழங்கள் அழிப்பு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை.
தமிழ் நாடு உணவு பாதுகாப்பு துறை ஆணையர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் படி ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாம்பழக் குடோன், மொத்த விற்பனை கடைகளில் செயற்கை முறையில் ரசாயனம் மற்றும் கார்பைடு கற்கள் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ் செல்வன், அருண்குமார் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 23 கிலோ அழுகிய நிலையில் உள்ள மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. பழங்களை இயற்கையான முறையில் பழுக்க வைத்து உண்பதே சிறந்தது எனவும், செயற்கை முறையில் ரசாயனம் பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைப்பதால் அப்பழங்கள் சாப்பிடும் பொது மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் எனவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கூறுகையில் இந்த ஆய்வானது மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் .பழங்களை பழுக்க வைக்க ரசாயனம் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேலும் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் படி சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொது மக்கள் உணவுப் பொருட்கள் மீதான புகார் தெரிவிக்க 94440-42322 என்ற எண்ணில் வாட்ஸ்அப் செய்யலாம் என்று தெரிவித்தார்.