அரியலூர், மே 13:
அரியலூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த15 நாள்களாக நடைபெற்று வந்த கோடைக்கால பயிற்சி முகாம் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது.
கைப்பந்து, தடகளம், கூடைப்பந்து, ஹாக்கி, கால்பந்து, சிலம்பம், ஸ்கேட்டிங் உள்ளிட்ட பயிற்சி முகாமில் 145 மாணவர்கள், 74 மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டனர்.
திங்கள்கிழமை நடைபெற்ற முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவக்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன் ஆகியோர் கலந்து கொண்டு, பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பனியன்களை வழங்கினர். முன்னதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ந.லெனின் அனைவரையும் வரவேற்று பேசினார்.
பயிற்றுநர்கள் சந்தோஷ்குமார், ஹரிகரன், வாசுதேவன், ராஜ்குமார், மணிகண்டன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தினேஷ்குமார், செல்வம், கண்ணன், கலியமூர்த்தி, சிலம்பேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர்.