நாகர்கோவில் மே 4,
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்-க்கு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும், குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளருமான என்.தளவாய்சுந்தரம் அலைபேசியில் தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தார்.
அதன் விவரம் வருமாறு :-
கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் தமிழ்நாட்டின் முதலாவது அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் கொண்டு வந்தார். இங்கு ஆயுர்வேத மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மற்றும் கேரளாவை சேர்ந்த மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்கள். இவர்களுக்கென விடுதியும் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் சிகிட்சைக்காக வருகின்றனர். இவர்களில் ஒரு சில நாட்களில் தங்கி இருப்பவர்கள், நீண்ட நாள் தங்கி சிகிட்சை பெறுபவர்கள் என பல தரப்பட்ட நோயாளிகள் சிகிட்சை பெற்று வருகின்றனர். இம்மருத்துவ மனையில் உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் இருந்து சிகிட்சை பெற்று வருகின்றனர். சிகிட்சைகளின் அடிப்படையில் பஞ்சகர்மா, நீராவி குளியல், எண்ணெய் குளியல் உட்பட பல்வேறு சிகிட்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது கோடை காலமாக இருப்பதால் தண்ணீர் தட்டுப்பாடு இம்மருத்துவமனையில் ஏற்பட்டுள்ளது. குளிப்பதற்கும், கழிவறை பயன்பாட்டிற்கும் தேவையான தண்ணீர் கிடைக்கப் பெறவில்லை என இங்கு தங்கி உள்ள நோயாளிகள் குறை கூறி வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் முன்பு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது மருத்துவ மனைக்கு வருகின்ற குடி தண்ணீர் குழாயில் பழுது ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 15 நாட்களுக்கு மேலாகியும், பழுதினை சரிசெய்ய மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து தளவாய்சுந்தரம், எம் எல் ஏ மாநகராட்சி பொறியாளரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். மேலும் அவர் நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடை சரி செய்வதற்கு ஏதுவாக, மாற்று ஏற்பாட்டின் மூலம் லாரியில் தண்ணீர் கொண்டு வந்து மருத்துவமனை டேங்கில் நிரப்பி பம்ப் செய்து தண்ணீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்தார். அதன் பேரில் தண்ணீர் கொண்டு வந்து டேங்கில் நிரப்பப் பட்டது. அப்போது மாநகராட்சி உறுப்பினர் அக்சயா கண்ணன், வழக்கறிஞர்கள் ஜெயகோபால், முருகேஷ்வரன் ஆகியோர் இருந்தனர். மேலும் மருத்துவமனைக்கு வரும் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதினை சரி செய்யும் வரை நாள்தோறும் லாரி மூலம் குடி தண்ணீர் கொண்டு வந்து தண்ணீர் நிரப்பவும் அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து மக்களுக்கு கொடுப்பதற்கு பயன்படுத்தப்படும் 2 மாநகராட்சி லாரிகள் பழுதடைந்து 3 மாதமாக ஓரங்கட்டப்பட்டு கிடக்கிறது. இதனை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. கோடை காலத்தை கருத்தில் கொண்டு காலம் தாழ்த்தாமல் பழுதடைந்த லாரிகளை சரி செய்து பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய இந்த லாரிகளை பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அத்தியவாசியமாக உள்ள மருத்துவமனை போன்ற பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இருந்தால் 9047888278 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
மேலும் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில்
தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் நோயாளிகளுக்கு கிடைப்பதற்கும், மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் அந்தந்த பகுதிகளில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மூலம் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் அலைபேசி மூலம் வலியுறுத்தினார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரிடம் உறுதியளித்தார்.