நாகர்கோவில் பிப் 27
கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் க. செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அனைத்து அஞ்சலகங்களிலும் பெண் குழந்தைகளின் நலனுக்காக செல்வமகள் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்படுவது போன்று உங்கள் ஆண் குழந்தைகளின் நலனுக்காகவும் நீங்கள் PPF – பொது வருங்கால வைப்புநிதி சேமிப்பு திட்டத்தில் அஞ்சலகங்களில் சேமிக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் பெற்றோர் அல்லது சட்டபூர்வ பாதுகாவலர்கள் தங்கள் ஆண் குழந்தையின் பெயரில் எந்த தபால் நிலையத்திலும் PPF சேமிப்பு கணக்கினை தொடங்கிடலாம். ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 500 ம் அதிகபட்சம் ரூபாய் 1.5 லட்சமும் செலுத்தி கணக்கை தொடங்கலாம். இந்த திட்டக் கணக்கிற்கு 7.1% வட்டி வழஙகப்படுகிறது. வருமான வரி சட்டத்தின் பிரிவு 80 C இன் படி ஒரு நிதியாண்டிற்கு 1.5 லட்சம் வரை வரிசலுகையும் வழங்கப்படுகிறது. கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 15 ஆண்டுகளுக்குப் பின் கணக்கு முதிர்ச்சி அடைகிறது. கணக்கு முதிர்வு பெற்ற ஒரு வருடத்திற்குள்ளாக விண்ணப்பம் அளித்து மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு கணக்கினை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பகுதியளவு பணம் எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. உங்கள் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது ஒவ்வொரு தனிநபரும் அவர்களின் சேமிப்புக்காகவும் இக்கணக்கினை தொடங்கலாம்.
ஆகவே அனைவரும் பயனடையும் வகையில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை அனைத்து அலுவலகங்களிலும் PPF கணக்குகளைத் தொடங்குவதற்கான சிறப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த நாட்களில் நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் அலுவலகங்கள் மற்றும் அனைத்து தபால் அலுவலகங்களிலும் உரிய ஆவணங்களை ஒப்படைத்து இக்கணக்கினைத் தொடங்கிக் கொள்ளலாம். அஞ்சலகங்களில் உங்களுக்கும் உங்கள் ஆண் பிள்ளைகளுக்கும் இக்கணக்கினைத் தொடங்கி பாதுகாப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.