அரியலூர்,மே:08
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடடிவக்கைகள், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் வி.அருண் ராய் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில் நேற்று (07.05.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலைகள் பாதிப்புகளிலிருந்து தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கான மருத்துவ சிகிச்சை வசதிகள் உரியவாறு ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும், பொதுமக்களுக்கு கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலைகள் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார். இதேபோன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள நீர்த் தேக்கத் தொட்டிகள், ஆழ்துளை கிணறுகள், திறந்த வெளி கிணறுகள், கை பம்புகள் மற்றும் சிறிய அளவிலான நீர்த் தேக்க தொட்டிகள் உள்ளிட்டவைகளின் விவரம் குறித்தும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவது குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அவர்கள் விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்தார். பொதுமக்களிடமிருந்து குடிநீர் தொடர்பாக வரப்பெறும் புகார்கள் மற்றும் செய்திகளின் மீது தனிக்கவனம் செலுத்தி அப்பகுதிகளுக்கு உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி திருமானூர் ஊராட்சி ஒன்றியம், கீழப்பழுவூர் ஊராட்சி, கீழப்பழுவூர் புதிய பேருந்து நிலையத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 15வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியினை பார்வையிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமான பணிகளின் தரம், நீர்தேக்கத் தொட்டியின் கொள்ளளவு, மேல்நிலை நீர்தொட்டியின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ள ஊராட்சி வார்டுகளின் எண்ணிக்கை மற்றும் தினசரி பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ள குடிநீரின் அளவு உள்ளிட்ட தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து, பூண்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.12.25 இலட்சம் மதி;ப்பீட்டில் பூண்டி ஏரியில் கட்டப்பட்டுள்ள சமுதாய கிணறு அமைத்தல் பணியினை பார்வையிட்டு பணிகளின் தரம், திட்ட மதிப்பீடு, கிணற்றின் அளவு, தண்ணீர் விநியோகம், கால்நடைகள் நீர் அருந்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நீர் தேக்க தொட்டி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் வி.அருண் ராய் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சித் துறை) மாது, அரியலூர் வட்டாட்சியர் ஆனந்தவேல், மாவட்ட நிலை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.